38 வயதிலும் அஃப்ரிடி அதிரடியான பேட்டிங்கை ஆடி மிரட்டியுள்ளார். 

அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த கேப்டனுமான அஃபிர்டிக், தனது அதிரடியான பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுபவர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. பேட்டிங்கில் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாகவே ஆடுவார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் மிரட்டியவர் அஃப்ரிடி. 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அஃப்ரிடி, டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் ஆடிவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி10 லீக் தொடரில் பாக்டூன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் அஃப்ரிடி. இறுதி போட்டியில் நார்தர்ன் வாரியர்ஸ் அணியுடன் மோதிய அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது. 

இந்த தொடரின் தகுதிச்சுற்று போட்டியிலும் நார்தர்ன் வாரியர்ஸ் அணியுடன் தான் பாக்டூன்ஸ் அணி மோதியது. அந்த போட்டியில் பாக்டூன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாக்டூன்ஸ் அணி, 10 ஓவரில் 135 ரன்களை குவித்தது. 136 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நார்தர்ன் வாரியர்ஸ் அணி 122 ரன்களை மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாக்டூன்ஸ் அணியின் இன்னிங்ஸில், அஃப்ரிடி தனது இளமைக்கால ஆட்டத்தை ஆடி மிரட்டினார்.

அதிரடி வீரர் அஃப்ரிடி 38 வயதிலும் மிரட்டலான பேட்டிங் ஆடினார். வெறும் 17 பந்துகளில் 59 ரன்களை குவித்தார் அஃப்ரிடி. 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்த அஃப்ரிடி, 7 சிக்ஸர்களை விளாசினார். அதிலும் பாகிஸ்தான் பவுலர் வஹாப் ரியாஸ் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார்.