ஆசிய கோப்பையில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் பெற்ற வெற்றி, அபாரமான வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற மிகப்பெரிய அணிகள் இதுவரை செய்யாத சாதனையை ஆஃப்கானிஸ்தான் செய்துள்ளது. 

14வது ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. 

இந்த இரு போட்டிகளிலுமே இலங்கை அணியின் பவுலர்கள் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இரண்டு போட்டிகளிலுமே பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். வங்கதேசத்துக்கு எதிராக 124 ரன்களிலில் ஆல் அவுட்டான இலங்கை, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெறும் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அனுபவம் வாய்ந்த சர்வதேச அணியான இலங்கை, ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியிருப்பது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதுவும் சாதாரண தோல்வியல்ல; படுதோல்வி. 

இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. அதாவது ஆசிய கோப்பை தொடரில் இலங்கையை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அணிகளின் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. 

81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலுவான முன்னணி அணிகளே இலங்கையை இதுவரை ஆசிய கோப்பையில் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியதில்லை. முதலிரண்டு இடங்களுமே இந்த தொடரில் தான் எட்டப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில், தற்போதைய இலங்கை அணி பலகீனமாக இருப்பதை அறியமுடிகிறது.