உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான  தகுதி சுற்றில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான், 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான  தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 55 ஓட்டங்களும், கெவின் ஓ பிரையன் 41 ஓட்டங்களும் எடுத்தனர். 

ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

இதில் முகமது ஷாசாத் 54 ஓட்டங்களும், குல்படின் நயிப் 45 ஓட்டங்களும், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 39 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர். 

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன், 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. தொடர்ந்து 2 முறையாக உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆடுகிறது.