டி20 லீக் தொடர்களை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 ஓவர்களை கொண்ட டி10 லீக் தொடர் ஆடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு டி10 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 8 அணிகள் கலந்துகொண்டு ஆடும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

நேற்று தொடங்கிய இந்த தொடர் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. அதில் ஒரு போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்திஸ் அணியும் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான ராஜ்பூட்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிந்திஸ் அணி, ஷேன் வாட்சனின் அதிரடி பேட்டிங்கால் 10 ஓவர் முடிவில் 94 ரன்கள் எடுத்தது. 

10 ஓவரில் 95 ரன்கள் என்ற இலக்குடன் ராஜ்பூட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஆஃப்கானிஸ்தான் வீரர் ஷேஷாத்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அடித்து ஆட தொடங்கிய ஷேஷாத், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதுபோன்றதொரு அதிரடி ஆட்டத்தை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. 

வெறும் 16 பந்துகளில் 74 ரன்களை குவித்தார் ஷேஷாத். 16 பந்துகளை எதிர்கொண்ட ஷேஷாத், 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை விளாசினார். மெக்கல்லமும் தன் பங்கிற்கு 8 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க, வெறும் 4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வென்றது ராஜ்பூட்ஸ் அணி. 

நவாஸ் வீசிய முதல் ஓவரில் 20 ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் 23 ரன்கள், திசாரா பெரேரா வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என மொத்தம் 30 ரன்கள், நான்காவது ஓவரில் 23 ரன்கள் என மொத்தம் 4 ஓவரிலேயே 96 ரன்களை குவித்து வென்றது ராஜ்பூட்ஸ் அணி. ஷேஷாத்தின் ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.