ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரியின் பவுலிங்கை பார்த்து மிரண்டு போயுள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்துள்ளது. 

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, உமேஷ், ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்பின் பவுலரே இல்லாமல் ஹனுமா விஹாரியை மட்டும் நம்பி களமிறங்கிய இந்திய அணியை விஹாரி ஏமாற்றவில்லை. அவரது பங்கிற்கு அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 70 ரன்கள் அடித்த மார்கஸ் ஹாரிஸையும் 45 ரன்கள் அடித்த ஷான் மார்ஷையும் ஹனுமா விஹாரி வீழ்த்தினார். 

களத்தில் நிலைத்து நின்ற இரண்டு வீரர்களையும் வீழ்த்தி அசத்தினார் ஹனுமா விஹாரி. இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் விஹாரியின் பவுலிங்கில் திணறினர். அதிலும் மார்கஸ் ஹார்ஸை வீழ்த்திய விஹாரியின் பந்து, அனைவரையும் மிரட்சியில் ஆழ்த்தியது. 

தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் களத்தில் நங்கூரம் போட்டி நிலைத்து நின்று 70 ரன்களை அடித்தார். அவரை வேகப்பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியாத நிலையில், பார்ட் டைம் ஸ்பின் பவுலரான விஹாரி வீழ்த்தினார். ஹாரிஸை வீழ்த்திய பந்துதான் மிகவும் அபாரமானது. ஸ்பின்னில் பவுன்ஸரை போட்டு ஹாரிஸை அவுட்டாக்கினார் விஹாரி. ஸ்பின் பந்து பவுன்ஸாகும் என்பதை நினைக்காத ஹாரிஸ், திடீரென பந்து நெஞ்சு உயரத்திற்கு எகிறியதால் அதை பேட்டால் தட்டி ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்த பந்தை கண்டு அவுட்டான ஹாரிஸ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. நேற்றைய ஆட்டத்துக்கு பின் பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச், ஆஃப் ஸ்பின்னர் நெஞ்சு உயரத்திற்கு பவுன்ஸர் வீசியதை கண்டு அதிர்ந்துபோனோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி நடப்பது இதுதான் முதன்முறையாக இருக்கும் என நினைக்கிறேன். விஹாரி வீசும் ஃபுல் லெந்த் பந்துகள் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு விஹாரி நெருக்கடி கொடுக்கிறார் என்று ஃபின்ச் தெரிவித்தார்.