இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. 

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார். 

ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில், நியூசிலாந்து தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆனார். ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் கில் ஆடுவார். 

ராகுலின் இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டாலும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தியா ஏ அணிக்காகவே ஆடிவருகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் கோல்டன் டக்காகி ஏமாற்றினார். எனவே அவரது அவுட் ஆஃப் ஃபார்ம் இன்னும் தொடர்ந்து வருகிறது. அவர் இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. 

அதேநேரத்தில் அவருக்கு மாற்றாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஷுப்மன் கில், கடந்த ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றதோடு, அதன்பிறகு ஐபிஎல் மற்றும் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடியுள்ளார். 

எனவே உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் ராகுலின் இடத்தை ஷுப்மன் கில் பிடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கிளப்பியுள்ளார். ஷுப்மன் கில்லை பாராட்டி டுவீட் செய்துள்ள சோப்ரா, மற்றொரு டுவீட்டில் உலக கோப்பையில் ராகுலின் இடத்தை ஷுப்மன் கில் பிடிப்பது குறித்த சந்தேகத்தையும் முன்வைத்துள்ளார்.