இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துக் கொண்டு, 318 ஓட்டங்கள் எடுக்க போராடுகிறது.

405 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் கேப்டன் குக்-ஹஸீப் ஹமீது ஜோடியின் ஆட்டத்தால் சரிவிலிருந்து தப்பியது இங்கிலாந்து அணி. இந்த ஜோடி 50.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 75 ஓட்டங்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை 318 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் கோலி 167, புஜாரா 119, அஸ்வின் 58 ஓட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 255 ஓட்டங்களுக்குச் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 70 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரஹானே 26 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த அஸ்வின் 7, சாஹா 2 ஓட்டங்களில் கிளமினார்.

இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி 109 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜெயந்த் யாதவ் களமிறங்க, ஜடேஜா 14 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த உமேஷ் யாதவ் டக் அவுட்டாக, ஜெயந்த் யாதவுடன் இணைந்தார் முகமது சமி.

ஜெயந்த் யாதவ் ஒருபுறம் நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, மறுமுனையில் சமி இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் சேர்த்தது.

கடைசி விக்கெட்டாக சமி 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா 63.1 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயந்த் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 405 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என்பதால் ஆரம்பத்திலேயே போட்டியை டிரா செய்யும் முயற்சியில் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் அலாஸ்டர் குக்-ஹஸீப் ஹமீது ஜோடி தடுப்பாட்டம் ஆடி இந்திய பெளலர்களை வெறுப்பேற்றியது.

இந்திய கேப்டன் கோலி, 5 பெளலர்களையும் மாற்றிமாற்றி பந்துவீச வைத்தபோதும், குக்கும், ஹமீதும் அசரவில்லை. குக்கிற்கு இரு முறை அவுட் கேட்டு டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகினார் கோலி. ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்ல.

இதனால் இந்திய அணி தனது இரு டிஆர்எஸ் வாய்ப்புகளையும் இழந்தது. 50 ஓவர்கள் நங்கூரமாக நின்று இந்திய பெளலர்களை சோதித்த இந்த ஜோடியை 51-ஆவது ஓவரில் பிரித்தார் அஸ்வின். 144 பந்துகளைச் சந்தித்த ஹமீது 25 ஓட்டங்கள் சேர்த்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் கண்ட ஜோ ரூட்டும் ஆமை வேகத்தில் ஆட, மறுமுனையில் தடுப்பாட்டத்தை தொடர்ந்த குக் 171 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 53-ஆவது அரை சதம் இது.

இந்திய பெளலர்களுக்கு தொடர்ந்து எரிச்சலூட்டிய குக் 54 ஓட்டங்கள் (188 பந்துகள்) எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதோடு ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 59.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 23 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 318 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.