
மும்பை,
1947–ம் ஆண்டு ஹோல்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர்கள் விஜய் ஹசாரே–குல் முகமது எடுத்திருந்த 577 ஓட்டங்களை முறியடித்து, 594 ஓட்டங்கள் குவித்து குகாலே – பாவ்னே இணை சாதனை படைத்துள்ளனர்.
ரஞ்சி கிரிக்கெட்டில் மராட்டியம் – டெல்லி அணிகள் (பி பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த மராட்டிய அணி 2–வது நாளான வெள்ளிக்கிழமை முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 635 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் ஸ்வப்னில் குகாலே 351 ஓட்டங்களுடனும் (521 பந்து, 37 பவுண்டரி, 5 சிக்சர்), அங்கித் பாவ்னே 258 ஓட்டங்களுடனும் (500 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இருவரும் 3–வது விக்கெட்டுக்கு 594 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ஒரு ஜோடியின் அதிகபட்ச ரன் இது தான்.
இதற்கு முன்பு 1947–ம் ஆண்டு ஹோல்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர்கள் விஜய் ஹசாரே–குல் முகமது 4–வது விக்கெட்டுக்கு 577 ஓட்டங்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 69 ஆண்டு கால சாதனையை குகாலே – பாவ்னே இணை முறியடித்து அசத்தியுள்ளது.
அத்துடன் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் (டெஸ்டையும் சேர்த்து) ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2–வது அதிகபட்சமாகவும் இது பதிவானது. 2006–ம் ஆண்டு கொழும்பில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் சங்கக்கரா–மஹேலா ஜெயவர்த்தனே ஜோடி 3–வது விக்கெட்டுக்கு 624 ரன்கள் திரட்டியதே ஒட்டுமொத்த சாதனை பட்டியலில் சிறந்ததாக நீடிக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் பிலாஸ்புரில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரெயில்வே அணி (ஏ பிரிவு) முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 161 ரன்களுடன் நல்ல நிலையை எட்டியுள்ளது. கேப்டன் அபினவ் முகுந்த் 98 ரன்களுடனும், கவ்ஷிக் காந்தி 41 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள்.
ரோட்டாக்கில் நடந்து வரும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் யுவராஜ்சிங் 177 ரன்களில் கேட்ச் ஆனார்.
