3 centuries and one double century in indian team
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி, புஜாரா, முரளி விஜய், ரோஹித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் நாளிலேயே 205 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 7 ரன்களில் வெளியேறினார். எனினும் சிறப்பாக விளையாடிய முரளி விஜயும் புஜாராவும் சதம் விளாசினர்.

இதைத்தொடர்ந்து கைகோர்த்த கோலியும் ரோஹித்தும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி, 259 பந்துகளுக்கு இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தனது 5வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் கோலி.

213 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி பெரேரா பந்துவீச்சில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டியில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ரோஹித் சர்மாவின் சதத்திற்காக காத்திருந்த இந்திய கேப்டன் கோலி, ரோஹித் சதமடித்ததும் இன்னிங்சை டிக்ளேர் செய்தார்.
இந்திய அணியில், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சதமடித்தனர். கேப்டன் கோலி இரட்டை சதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்திய அணியை 405 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு, முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே, தொடக்க வீரர் சமரவிக்ரமாவை இஷாந்த் சர்மா போல்டாக்கினார். மூன்றாவது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
இன்னிங்ஸ் வெற்றியை நோக்கிய வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.
