பரோடாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

கெய்க்வாட் 14 வயதுக்கு உட்பட்ட தொடரில் பரோடாவை சேர்ந்த பிரியான்ஷு மோலியா என்ற சிறுவன், ஒரு இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 319 பந்துகளில் 98 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 556 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. அந்த சிறுவன் ஆடிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 826 ரன்களை குவித்தது. 

இந்த சிறுவன், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் நாயகன் மோஹிந்தர் அமர்நாத்தின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறான். 

இந்த இன்னிங்ஸ் மற்றும் தனது பயிற்சியாளர் குறித்து பேசிய அந்த சிறுவன், நூறு நூறு ரன்களாக இலக்கு நிர்ணயித்து ஆடினேன். மோஹிந்தர் சார் வலையில் நான் மேற்கொள்ளும் பயிற்சிகளை எப்போதும் பார்த்து கொண்டிருப்பார். பிறகு என்னிடம் பல வித்தியாசமான ஷாட்களை ஆடுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் அளிப்பார். அந்த பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்ட பிறகு பேக்ஃபூட் ஷாட்கள், கவர் ஷாட்கள் எல்லாம் ஆடுவதால் அதிக ரன்களை குவித்தேன். எனது ஆட்டத்தால் மோஹிந்தர் சார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதேபோல் நன்றாக ஆடுமாறு என்னை வாழ்த்தினார் என்று கூறியுள்ளான் அந்த சிறுவன்.