தோனியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றான, இலங்கைக்கு எதிராக அவர் 183 ரன்கள் குவித்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்து இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. 

கேப்டன்சியில் இருந்து விலகி தற்போது அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். அதிரடியாக ஆடி, சிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற தோனி, இன்று ஃபார்மில் இல்லாததால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அணியில் அவரது இருப்பு குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. 

எனினும் தோனியின் அனுபவ ஆலோசனையும் அவரது விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு தேவை என்பதால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை கண்டிப்பாக ஆடுவார். தோனி எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தோனி இன்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாக அக்டோபர் 31(நேற்றைய தேதி) அன்று அவர் ஆடிய ஆட்டத்தை பார்ப்போம். இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் அபாரமாக ஆடிய தோனி 183 ரன்களை குவித்தார். ஜெய்ப்பூரில் நடந்த அந்த போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கிய தோனி, 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 183 ரன்களை குவித்து மிரட்டினார். தோனியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் அதுவும் ஒன்று. ஒருநாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோரும் அதுதான். 

நேற்றுடன் அந்த இன்னிங்ஸை தோனி ஆடி 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மிகச்சிறந்த இன்னிங்ஸின் நினைவாக அதன் ஹைலைட்ஸ் வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உங்களுக்காக அந்த வீடியோ இதோ..