இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட வீரர்களில் முக்கியமானவர் யுவராஜ் சிங். கங்குலி, டிராவிட், தோனி, கடைசியில் கோலி வரை அனைவரின் கேப்டன்சியிலும் ஆடியவர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் யுவராஜ் சிங். இந்திய அணி தோனி தலைமையில் 2007 டி20 உலக கோப்பையை வென்றபோதும், 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும், அணியில் முக்கிய பங்காற்றியவர். கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், 18 ஆண்டுகள் கழித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வென்ற பின்னர், கங்குலி டிஷர்டை கழட்டி சுற்றிய சம்பவத்தின்போது நடந்த மற்றொரு ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடியது. 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடர் 3-3 என சமநிலை அடைந்தது. முதல் 5 போட்டிகளில் இந்தியா மூன்றிலும் இங்கிலாந்து இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தன. கடைசி போட்டியில் இந்தியா வென்றால் ஒருநாள் தொடரை இந்திய அணி 4-2 என கைப்பற்றலாம். அதே இங்கிலாந்து வென்றால் 3-3 என தொடர் சமநிலை அடைந்தது.

இப்படியான சூழலில் கடைசி மற்றும் 6வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி நேரத்தில் பெற்ற திரில் வெற்றியை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் டிஷர்ட்டை கழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்த தோல்வியால் அப்போதைய கேப்டன் கங்குலி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சம்பவம் 2002 பிப்ரவரியில் நடந்தது. 

அதன்பிறகு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடியது. இலங்கையும் கலந்துகொண்ட அந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 326 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி இந்திய அணி வெற்றி பெறும். இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்தியாவில் டிஷர்ட்டை கழற்றி சுற்றிய பிளிண்டாப்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்குலி டிஷர்ட்டை கழற்றி சுற்றி வெற்றியை கொண்டாடினார். இந்த சம்பவத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க மாட்டார்கள்.

லார்ட்ஸில் கங்குலி டி ஷர்ட்டை கழட்டி சுற்றியபோது, தானும் டி ஷர்ட்டை கழட்டி சுற்றியதாகவும், ஆனால் அதை மற்றவர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள் எனவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், நானும் டி ஷர்ட்டை கழட்டினேன். ஆனால் நான் உள்ளே ஒரு டிஷார்ட் போட்டிருந்ததால் யாரும் அதை கவனிக்கவில்லை. இங்கிலாந்தில் குளிர் அதிகமாக இருந்ததால் நான் உள்ளே ஒரு டிஷர்ட் போட்டிருந்தேன். அதனால் நான் டிஷர்ட்டை கழட்டியதை யாரும் கவனிக்கவில்லை.

அந்த போட்டியில் கைஃப் அபாரமாக ஆடினார். நான் அவுட்டான பின்னரும் கைஃப் சிறப்பாக ஆடி கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். அவரது கெரியரில் முக்கியமான இன்னிங்ஸ் அது. என்னுடைய கெரியரிலும் அந்த இன்னிங்ஸ் ரொம்ப முக்கியமானது. அந்தநேரத்தில் கொஞ்சம் சுதாரிப்பாக ஆடியிருந்தால் நான் சதமடித்திருப்பேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.