சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகாத வீரருக்கு டி20(ஐபிஎல்) கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் வாரி வழங்கினால் எந்த இளம் வீரர் வந்து டெஸ்ட் ஆட விரும்புவார் என யுவராஜ் சிங் கேள்வியெழுப்பியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக ஒரு கருத்து நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளின் அறிமுகத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் பயங்கரமாக நலிவடைந்துவிட்டது.

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதைப் போன்று உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கல் நடத்தப்படுகின்றன. மற்ற அனைத்தையும் விட ஐபிஎல் தான் அதிக பணம் புழங்கும் பணக்கார டி20 லீக் தொடர். 

அதனால் ஐபிஎல்லில் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை, அறிமுகமில்லாத வீரர்கள் முதல் பிரபலமான வீரர்கள் வரை என பாரபட்சமின்றி அனைவருக்கும் கோடிகளில் கொட்டி கொடுக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த அல்லது குறைந்தபட்சம் முகம் அறிமுகமான வீரர்களுக்கு கோடிகள் கொட்டிக் கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமே ஆயிராத இளம் வீரர்களுக்கெல்லாம் கோடிகள் கொட்டி கொடுக்கப்படுகின்றன.

இளம் வீரர்களுக்கு இப்படி கோடிக்கணக்கில் ஊதியம் கொடுத்தால், அவர்களுக்கு எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்ற ஆர்வம் வரும் என கேள்வியெழுப்பியுள்ள யுவராஜ் சிங், அதுவே டெஸ்ட் கிரிக்கெட் அழிவிற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள யுவராஜ் சிங், டெஸ்ட் கிரிக்கெட் செத்து கொண்டிருக்கிறது. மக்கள் டி20 கிரிக்கெட்டை பார்க்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். வீரர்களும் டி20 போட்டிகளில் ஆடத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரர்கள் கூட ரூ.7-10 கோடி சம்பாதிக்கும்போது, அவர்கள் ஏன் 5 நாட்கள் விளையாடி 5 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வேண்டும் என நினைக்கப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் யுவராஜ் சிங்.