இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்ற ஃபாஸ்ட் பவுலிங் வீசக்கூடிய ஆல்ரவுண்டரான ஷிவம் துபே, டி20 கிரிக்கெட்டில் அறிமுக இன்னிங்ஸிலேயே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார். 

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் துபே, பவுலிங்கும் நன்றாகவே வீசினார். ஆரம்பத்தில் தனது பந்தில், எதிரணி வீரர்கள் ஸ்கோர் செய்துவிட்டால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாமல் அதை திருத்திக்கொண்டு அடுத்தடுத்த ஓவர்களை நன்றாக வீசுகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பந்துவீசும்போது இப்படித்தான் செயல்பட்டார். 

சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிவம் துபே, ஐந்தாவது பவுலராக ஆடவைக்கப்பட்டார். அவர் பேட்டிங் ஆல்ரவுண்டர் தான். எனினும் அந்த போட்டியில் அவர் தான் ஐந்தாவது பவுலிங் ஆப்சன். அதனால் கண்டிப்பாக அவரது முழு கோட்டாவையும்(10ஓவர்கள்) கிட்டத்தட்ட வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எனவே ஐந்தாவது பவுலராக பவுலரையே ஆடவைப்பது நல்லது என்பதற்காக ஷிவம் துபே, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடவைக்கப்படவில்லை. அந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆடினார். 

ஆனாலும் அவர் இந்திய அணியில் கிட்டத்தட்ட தனது இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் அறிமுக இன்னிங்ஸிலேயே அவர் ஆடிய விதம் அபாரமானது. அதேபோல பவுலிங்கும் மோசமல்ல. நன்றாகத்தான் வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிட்டாலும் ஷிவம் துபே தொடர்வாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் அணியின் காம்பினேஷன் கருதி, நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

ஆனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஷிவம் துபே குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், டி20 உலக கோப்பைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான இந்திய அணியை உறுதி செய்ய வேண்டும். டி20 உலக கோப்பைக்கு, முன்கூட்டியே அணியை உறுதிசெய்து தயாராக இருக்க வேண்டும். அணியின் காம்பினேஷன் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம். ஷிவம் துபேவை அணியில் சேர்க்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனெனில் அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், சரியான தேர்வாக இருப்பார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் நன்றாக வீசுகிறார் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் வீரர்கள், அணியில் அவர்களது ரோல் என்ன என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். அணியில் இடம்பெறும் வீரர்களுக்கான இடம் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான ரோல் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எந்த வீரருக்கும் அணியில் இருப்போமா மாட்டோமா என்ற நிலையற்ற தன்மை இருக்கக்கூடாது. உலக கோப்பைக்கான தயாரிப்பில் மிகுந்த தெளிவுடன் இருக்க வேண்டும். 

ஷிவம் துபே மீது சில விமர்சனங்கள் உள்ளன. அணியில் இடம்பெற தகுதியான வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கினால்தான் அவர்களால் தங்களது திறமையை நிரூபிக்க முடியும் என்று ஷிவம் துபேவிற்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.