லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் ஆசியா லயன்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி தொடரை வென்றது. 

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள், வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ், இந்தியா மஹாராஜாஸ், ஆசியா லயன்ஸ் என 3 அணிகளாக பிரிந்து லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடினர்.

இதில் இந்தியா மஹாராஜாஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேற, வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆசியா லயன்ஸ் ஆகிய 2 அணிகளும் ஃபைனலில் மோதின.

ஃபைனலில் டாஸ் வென்ற ஆசியா லயன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் பீட்டர்சன், 22 பந்தில் 48 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் மஸ்டர்ட்(7) மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய கெவின் ஓ பிரயன்(2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 4ம் வரிசையில் ஆடிய கோரி ஆண்டர்சன், காட்டடி அடித்தார்.

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய கோரி ஆண்டர்சன், 43 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்தார். ஹேடின் 16 பந்தில் 37 ரன்களும், டேரன் சமி 17 பந்தில் 38 ரன்களும் விளாச, 20 ஓவரில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி 256 ரன்களை குவித்தது.

20 ஓவரில் 257 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆசியா லயன்ஸ் அணி தில்ஷான், ஜெயசூரியா, உபுல் தரங்கா, அஸ்கர் ஆஃப்கான், முகமது யூசுஃப் ஆகிய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் ஆடினார்கள். ஆனால் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், 20 ஓவரில் 231 ரன்களை குவித்த ஆசியா லயன்ஸ் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 

25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி கோப்பையை வென்றது.