இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால், ராகுல் ஆகிய இருவருமே பெரிதாக ஆடவில்லை. மயன்க் 12 ரன்களிலும் ராகுல் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி இந்த போட்டியில் இல்லாததால் நான்காம் வரிசையில் இறங்கிய ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

53 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ரோஹித் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 132 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ரோஹித் சர்மா 68 ரன்கள் அடித்தார். 

சிறப்பாக ஆடி சதமடித்த புஜாரா, 100 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நடையை கட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் அடித்திருந்தது. அத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்ய, இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் ஆடியது. 

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் தொடக்க வீரர் ஹாட்ஜ் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் தங்களது வேகத்தில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மிரட்டினர். ஹாட்ஜ் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் ஜெரெமி மற்றும் பிராண்டன் கிங் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. டேரன் பிராவோ உமேஷ் யாதவின் வேகத்தில் அவுட்டாக, ஜேசன் முகமதுவை ஜடேஜா ரன் அவுட் செய்தார். 77 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

மறுமுனையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹாட்ஜையும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அதன்பின்னர் ஓரளவிற்கு ஆடிய ஜோனாதன் கார்ட்டர் மற்றும் ஹாமில்டன் ஆகிய இருவரையும் குல்தீப் தனது சுழலில் வீழ்த்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகிவிட்டது. 

இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 11 ஓவர்கள் வீசியும் பும்ராவிற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு மட்டும் ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை. இந்திய டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னரான அஷ்வினுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடி 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் அடித்தது. அத்துடன் 3 நாட்கள் முடிந்துவிட்டதால் போட்டி டிரா ஆனது. 

இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் 8 ஓவர்கள் வீசினார். அந்த எட்டில் 4 ஓவர்களை மெய்டனாக வீசி, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் அஷ்வின் பந்துவீசாததற்கு காரணம் வெளிவந்துள்ளது. அஷ்வின் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் முழுவதும் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல், அவர் வெஸ்ட் இண்டீஸிற்கு சென்ற மறுநாளே பயிற்சி போட்டி ஆரம்பித்ததால், அவர் சோர்வாக இருப்பார் என்பதால் தான் அவருக்கு முதல் இன்னிங்ஸில் பவுலிங் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.