கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான், இரு அணிகளுக்குமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் ஆடவுள்ளதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

சொந்த மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி, சற்று கூடுதல் தீவிரத்துடன் இருக்கிறது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக கெத்தாக வலம் வரும் இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தீவிரமாக எதிர்நோக்கியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், டெஸ்ட் தொடர் குறித்து அதிரடியாக பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹோல்டர், எங்கள் அணியின் மனநிலை மிகவும் பாசிட்டிவாக உள்ளது. இது புதிய தொடர் என்பதை மட்டுமே மனதில்வைத்து, மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் வீரர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவருகிறோம். எனவே அதே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இந்திய அணியை எதிர்கொள்வோம். 

விராட் கோலி மற்றும் அஷ்வின் ஆகிய இருவருக்கும் எதிராக ஆடும் சவாலை எதிர்கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். எங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக ஆடுவோம் என்று ஹோல்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.