Asianet News TamilAsianet News Tamil

பூரன் அதிரடி பேட்டிங்; மற்றவர்கள் ஏமாற்றம்! வங்கதேசத்துக்கு ரெண்டுங்கெட்டான் இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 142 ரன்கள் அடித்து 143 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

west indies set 143 runs as target to bangladesh in t20 world cup
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 29, 2021, 5:38 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஷார்ஜாவில் நடந்துவரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன. இந்த 2 அணிகளுமே சூப்பர் 12 சுற்றில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், முதல் வெற்றியை எதிர்நோக்கி இரு அணிகளுமே ஆடிவருகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. வங்கதேச அணி, இலங்கை மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. 2 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பி படுதோல்வியை சந்தித்தது.

எனவே இந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெறும் வேட்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வங்கதேச அணியும் முதல் வெற்றியை எதிர்நோக்கி ஆடும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நூருல் ஹசன் மற்றும் நசும் அகமது ஆகிய 2 வீரர்களும் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக சௌமியா சர்க்கார் மற்றும் டஸ்கின் அகமது ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், முகமது நைம், லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மஹெடி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.

வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. லெண்டல் சிம்மன்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஸ்டான் சேஸும்,  ஹைடன் வால்ஷ் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரோஸ்டான் சேஸ், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, அகீல் ஹுசைன், ரவி ராம்பால்.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மறுபடியும் பேட்டிங்கில் சொதப்பியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ்(6) மற்றும் கிறிஸ் கெய்ல்(4) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பவர்ப்ளேயில் படுமட்டமாக பேட்டிங் ஆடியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஹெட்மயர்(9), ரசல்(0) ஆகிய 2 அதிரடி வீரர்களும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோஸ்டான் சேஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை மெது மெதுவாக உயர்த்தினார். இதற்கு முந்தைய போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த நிகோலஸ் பூரன், இந்த போட்டியில் ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

22 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்து 19வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ரோஸ்டான் சேஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஹோல்டர் 2 சிக்ஸரும், பொல்லார்டு ஒரு சிக்ஸரும் விளாச, 20 ஓவரில் 142 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 143 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது. இது எளிய இலக்கும் அல்ல; கடினமான இலக்கும் அல்ல.
 

Follow Us:
Download App:
  • android
  • ios