ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடர் தான், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர். 2022ம் ஆண்டு இறுதி போட்டியை நடத்தும் விதமாக, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. 

ஆனால், கொரோனா அச்சுறுத்தலால், 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. நான்கு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 8ம் தேதி மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான தொடர் நடக்கவுள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில், ஒரு டெஸ்ட் தொடருக்கு 120 புள்ளிகள். அந்தவகையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகள். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளி கணக்கை தொடங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, புள்ளி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாமிடத்தில் இருக்கிறது. 3, 4 மற்றும் 5ம் இடங்களில் முறையே நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் ஆறாம் இடத்தில் இலங்கையும் உள்ளன. 40 புள்ளிகளுடம் ஏழாம் இடத்தில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ்.