இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

இந்த போட்டிதான் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லுக்கு கடைசி ஒருநாள் போட்டி. தனது கடைசி போட்டியில் அதிரடியாக ஆடிய கெய்ல், இந்திய அணியின் பவுலிங்கை வெளுத்துவாங்கினார். முதல் மூன்று ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் கெய்லும் லெவிஸும் பொளந்துகட்டினர். இருவரும் தாறுமாறாக அடித்து 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். 

கெய்ல் 41 பந்துகளில் 72 ரன்களும் லெவிஸ் 29 ரன்களும் குவித்தனர். இருவரும் இணைந்து முதல் 10 ஓவர்களில் 8 சிக்ஸர்கள் அடித்தனர். கெய்ல் 5 சிக்ஸர்களும் லெவிஸ் 3 சிக்ஸர்களும் அடித்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். கெய்ல், லெவிஸுக்கு பின்னர் பூரான் மட்டுமே அதிரடியாக ஆடினார். மழை குறுக்கீட்டால் 35 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. 35 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 255 ரன்கள் என்ற இலக்கை, கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

தனது கடைசி போட்டியில் அபாரமாக ஆடிய கெய்ல் 72 ரன்களை குவித்ததோடு, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு சாதனையை படைக்க காரணமாக திகழ்ந்து கெத்தாக பிரியாவிடை பெற்றார் கெய்ல்.