வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வெறும் 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, அந்த சரிவிலிருந்து மீண்டும் முதல் இன்னிங்ஸில் 302 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் படுமோசமாக தொடங்கியுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடும் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர்கல் படுமட்டமாக பேட்டிங் ஆடினர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலியை முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு வீழ்த்தி வெளியேற்றிய கீமார் ரோச், அவரது அடுத்த ஓவரில் அசார் அலியை டக் அவுட்டாக்கி அனுப்பினார். மற்றொரு தொடக்க வீரரான இம்ரான் பட்டும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, வெறும் 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.

அப்படியான இக்கட்டான நிலையிலிருந்து பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து அபாரமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 166 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். பாபர் அசாம் 75 ரன்னில் ஆட்டமிழக்க, ஃபவாத் ஆலம் 76 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

அதன்பின்னர் முகமது ரிஸ்வானும் ஃபஹீம் அஷ்ரஃபும் இணைந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்திருந்தது பாகிஸ்தான் அணி. 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 

3ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் ரிஸ்வான் 31 ரன்னிலும், ஃபஹீம் அஷ்ரஃப் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க, ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்ற ஃபவாத் ஆலம் மீண்டும் களத்திற்கு வந்து ஆடி, சதத்தை பூர்த்தி செய்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து ஆடி 124 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நிற்க, 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34 ரன்களுக்கே, கேப்டன் பிராத்வெயிட், பவல், ரோஸ்டான் சேஸ் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 3ம் நாள் ஆட்டம் முடியப்போகும் தருவாயில் 3வது விக்கெட்டை இழந்ததால், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்டார். 3ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்துள்ளது.

பானரும் அல்ஸாரி ஜோசஃபும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையிலிருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு 302 ரன்களை குவித்தது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கலான நிலையில் உள்ளது. இதிலிருந்து மீள, அந்த அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் தேவை. இந்த போட்டியில் இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ளது.