முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், மும்பை வான்கடேவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினர். முதல் சில ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியிடமிருந்து போட்டியை பறித்தது இந்திய அணி. அதற்குக் காரணம், இந்திய தொடக்க வீரர்கள். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 135 ரன்களை சேர்த்து மிகச்சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 34 பந்தில் 71 ரன்களை குவித்தார். அவர் விட்ட  இடத்திலிருந்தே அவரை விட மிரட்டலாக தொடர்ந்த கோலி, வழக்கத்திற்கு மாறாக சிக்ஸர் மழை பொழிந்தார். 

21 பந்தில் அரைசதம் அடித்த கோலி, 29 பந்தில் 70 ரன்களை குவித்தார். ராகுல் 91 ரன்களை குவிக்க, இந்திய அணி 240 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 200 ரன்கள் கூட மும்பை வான்கடேவில் எட்டக்கூடிய இலக்கு என்பதால் முடிந்தவரை அதிகமான ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தொடக்கம் முதலே அடித்து ஆடிய இந்திய அணி 240 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 173 ரன்களுக்கு சுருட்டி 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

டி20 தொடரில் தோற்றது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான தொடக்கத்தை அமைத்தார்கள். ஆனால் நாங்கள் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்துக்குள் வந்தோம். அதன்பின்னர் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் ஆட்டம் கைவிட்டுப்போனது என்று பொல்லார்டு தெரிவித்துள்ளார்.