இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 204 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக  6 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராத்வெயிட் சிறப்பாக ஆடி 65 ரன்களையும் விக்கெட் கீப்பர் டோமினிக் பெஸ் 61 ரன்களையும் அடித்தனர். ரோஸ்டான் சேஸ் மற்றும் ப்ரூக்ஸும் ஓரளவிற்கு சிறப்பாக ஆடி பங்களிப்பு செய்ய, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் அடித்தது. 

114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராவ்லி அருமையாக ஆடி 76 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட்டிங் ஆடி 79 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விரைவில் ரன் சேர்த்த ஸ்டோக்ஸ், அரைசதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்ஸிலும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட ஸ்டோக்ஸ் தவறிவிட்டார். 

நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை ஆர்ச்சரும் மார்க் உட்டும் தொடர்ந்தனர். அவர்கள் இருவரையுமே ஷெனான் கேப்ரியல் வீழ்த்தினார். இதையடுத்து 313 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்ரியல், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் 3 விக்கெட்டுகளை 27 ரன்களுக்கே இழந்துவிட்டது. தொடக்க வீரர் கேம்ப்பெல் ஒரு ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். அதன்பின்னர் ரோஸ்டான் சேஸும் பிளாக்வுட்டும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

சேஸ்-பிளாக்வுட் ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினார்கள். நான்காவது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர். சேஸ் 37 ரன்களில் ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிளாக்வுட்டுடன் ஜோடி சேர்ந்த டௌரிச் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வெற்றியின் விளிம்பு வரை அழைத்துவந்த பிளாக்வுட், 95 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலையில், அணியின் ஸ்கோர் 189ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார் பிளாக்வுட். அதனால் அவர் அவுட்டானாலும் வெஸ்ட் இண்டீஸின் வெற்றி எளிதானது. பிளாக்வுட் அவுட்டானதும், கேப்டன் ஹோல்டருடன், முன்பு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகியிருந்த தொடக்க வீரர் கேம்ப்பெல் ஜோடி சேர்ந்து, இலக்கை எட்டினர்.

இதையடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது.