உலக கோப்பை தொடரை நம்பிக்கையுடனும் வெற்றியுடனும் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதன்பின்னர் படுமோசமாக சொதப்பிவருகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 105 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டி, இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ். அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது வெஸ்ட் இண்டீஸ். 

வங்கதேசத்துக்கு எதிராக 322 ரன்களை அடித்தும் கூட தோற்றது வெஸ்ட் இண்டீஸ். 5 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ், கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. 

இந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார். கை மணிக்கட்டு, கால் ஆகிய பகுதிகளில் காயங்களுடனேயே இதுவரை ஆடிவந்தார் ரசல். ஐபிஎல்லில் அதிரடியில் மிரட்டியதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பேட்டிங்கில் சுத்தமாக சோபிக்காத ரசல், பவுலிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவரால் களத்தில் முழு ஈடுபாட்டுடனும் தீவிரத்துடனும் ஆட முடியவில்லை. 

ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரால் அணிக்கு பிரயோஜனமேயில்லை. எனவே இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரசல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நர்ஸ் அல்லது கீமார் ரோச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

கெய்ல், லெவிஸ், ஹோப், பூரான், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர்(கேப்டன்), ரோச், கோட்ரெல், கேப்ரியல், ஒஷேன் தாமஸ்.