ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், அஷ்வின், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் என முக்கியமான வீரர்கள் அனைவரும் காயத்தால் வெளியேறிய காரணத்தால், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் அனைவருமே இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு பெற்றனர்.

பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். அறிமுக போட்டியிலேயே இருவரும் சிறப்பாக ஆடினர். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார். பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய சுந்தர், பவுலிங்கும் நன்றாக வீசினார். பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற சுந்தரின் பங்களிப்பும் முக்கியமானது.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வென்று தொடரை வென்றதும் இந்திய வீரர்கள், இந்திய தேசிய கொடியை தூக்கிக்கொண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றிநடை போட்டனர். வாஷிங்டன் சுந்தர் தனது கைகளில் தேசிய கொடியை தூக்கிக்கொண்டு நடந்தார். வெற்றியுடன் ஆஸி.,யிலிருந்து தமிழகம் திரும்பிய சுந்தர் மற்றும் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டுடன் இணைந்து பேட்டிங் ஆடியது மற்றும் தேசிய கொடியை தூக்கிக்கொண்டு நடந்தது ஆகியவை குறித்து ஸ்போர்ட்ஸ் டுடேவிற்கு பேசிய வாஷிங்டன் சுந்தர், நானும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அண்டர் 19லிருந்தே ஒன்றாக நிறைய ஆடியிருக்கிறோம். எனவே எங்களுக்குள் புரிதல் இருந்தது. நாங்கள் வேகமாக 30 ரன்களை எடுத்துவிட்டால், அது ஆஸி., மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என நம்பினோம். அதைத்தான் செய்தோம்; அதுதான் நடந்தது. ரிஷப் பண்ட் வின்னிங் பவுண்டரியை அடித்ததுதான், எனது வாழ்வின் மிகச்சிறந்த உணர்வு. கப்பாவில்(பிரிஸ்பேன் மைதானத்தில்) இந்திய தேசிய கொடியை தூக்கிக்கொண்டு நடந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார் சுந்தர்.