உலக கோப்பை தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் ஆடுகின்றன.

உலக கோப்பை தொடங்கிவிட்ட நிலையிலும் இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை இன்னும் முன்னாள் வீரர்கள் தெரிவித்துவருகின்றனர். ராகுல் அல்லது விஜய் சங்கர் 4ம் வரிசையில் இறக்கப்படுவது உறுதி. இருவரில் யார் என்பது குறித்த விவாதம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 4ம் வரிசையில் இறங்கி அபாரமாக ஆடி சதமடித்த ராகுல், கிட்டத்தட்ட நான்காம் வரிசையில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார் என்றே கூறலாம். நான்காம் வரிசையில் ராகுல் இறக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. 

ஆனால் தோனியை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங்கும் விஜய் சங்கரை இறக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கான 11 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்திருந்தார். 

அந்த அணியில் நான்காம் வரிசையில் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளார். லட்சுமணன் நான்காம் வரிசையில் ராகுலையே இறக்கலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல கேதர் ஜாதவிற்கு பதிலாக ஜடேஜாவை இறக்கலாம் என்பது அவரது கருத்து.