டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து சாதனைகளை படைத்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பல பேட்டிங் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் விராட் கோலி, அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலும் அதை செய்ய தவறவில்லை. மும்பையில் நடந்த கடைசி டி20 போட்டியில் 29 பந்தில் 70 ரன்களை குவித்த கோலி, முதல் போட்டியில் 94 ரன்கள் அடித்திருந்தார். மொத்தமாக இந்த தொடரில், 3 இன்னிங்ஸில் அதிகபட்சமாக 183 ரன்களை குவித்த கோலி, தொடர் நாயகன் விருதை வென்றார். 

சர்வதேச கிரிக்கெட்டில் கோலி வெல்லும் 17வது தொடர் நாயகன் விருது இது. இதன்மூலம் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இரண்டாவது வீரராக கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 20 தொடர் நாயகன் விருதை வென்ற சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய சச்சினே 20 தொடர் நாயகன் விருதுகள் தான் வென்றுள்ளார். வெறும் 11 ஆண்டில் 17 தொடர் நாயகன் விருதை வென்றுவிட்டார் கோலி. இதில் 3 டெஸ்ட் தொடரில் வென்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் 8 தொடர் நாயகன் விருதையும் டி20 கிரிக்கெட்டில் 6 தொடர் நாயகன் விருதையும் கோலி வென்றுள்ளார்.

சச்சின், கோலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் 15 தொடர் நாயகன் விருதை வென்ற ஜாக் காலிஸ் மூன்றாமிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், முத்தையா முரளிதரன், ஜெயசூரியா, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், ஷேன் வார்ன், கங்குலி, ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த வீரர்கள் பலரை கோலி அசால்ட்டாக முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.