வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி அபாரமாக ஆடி 120 ரன்களை குவித்தார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சோபிக்கவில்லை. அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த விராட் கோலி, வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 42வது சதத்தை பூர்த்தி செய்தார். 

ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை சேர்த்தார் கோலி. 120 ரன்கள் குவித்து 42வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணி கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 279 ரன்களை குவித்து டக்வொர்த் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த சதத்தின் மூலம் அரைடஜன் சாதனைகளை வாரி குவித்தார் விராட் கோலி. தனது இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய விராட் கோலி, உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் 60-65 ரன்கள் அடித்திருந்தபோதே மிகவும் சோர்வடைந்துவிட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அணி இருந்த சூழலில், நான் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. அணியின் சூழலை கருத்தில்கொண்டால், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எங்கிருந்தாவது எனர்ஜி கிடைத்துவிடும் என்று கோலி தெரிவித்தார்.