ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 208 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோர் செய்தார். கேஎல் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து நொறுக்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர். ராகுல் 40 பந்தில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பு முழுவதையும் தனது தோள்களில் சுமந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை சல்லி சல்லியாக நொறுக்கினார். 

வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு நிகராக சிக்ஸர்களையும் விளாசினார். 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். வழக்கமான தனது நேர்த்தியான ஷாட்டுகளின் மூலம் பந்துகளை பறக்கவிட்ட கோலி, சிக்ஸர்களை அசால்ட்டாக அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார். மிட் விக்கெட், எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன் என அடித்து நொறுக்கினார். 

விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் களத்திற்கு வந்த ஆரம்பத்தில், சில ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமலும், டைமிங் சரியாக இல்லாமலும் திணறினார் கோலி. அதன்பின்னர் களத்தில் நிலைத்த பிறகு அடித்து துவம்சம் செய்தார். 

போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய விராட் கோலி, இளம் பேட்ஸ்மேன்கள் யாரும் என்னுடைய இந்த இன்னிங்ஸின் முதல் பாதியை கண்டுகொள்ளாதீர்கள். அது மிகவும் மோசமாக இருந்தது. மெதுவாக ஆடி ராகுலுக்கு அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக வந்தவுடனே அடித்து ஆட நினைத்தேன். ஆனால் அது சரிவரவில்லை. அதன்பின்னர் என்ன தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்து அதை சரி செய்ததால் அதன் விளைவாக இரண்டாவது பாதியில் நன்றாக ஆடினேன். ஷாட் ஆடும்போது டைமிங் தான் எனது பலம். நான் பொதுவாக இறங்கிவந்து பந்துகளை காற்றில் பறக்கவிட்டு சிக்ஸர் மழைபொழிந்து ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்யும் வீரர் கிடையாது. எனவே எனது பலத்தை அறிந்து அதன்படி ஆடினேன். இலக்கை விரட்டும் எனது பணியை வழக்கமான எனது ஆட்டத்தின் மூலம் தொடர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்தார். 

தனது பலத்தையும் பலவீனத்தையும் கோலி தெளிவாக அறிந்து வைத்திருப்பதால்தான் அவரால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைகளை குவிக்கமுடிகிறது. தான், ரோஹித் சர்மா போன்ற சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கும் வீரர் கிடையாது. தனது பலமே டைமிங்கும், கேப்பை பார்த்து அடிப்பதும்தான் என்பது கோலிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பெரும்பாலும் பந்தை தூக்கியடிக்க மாட்டார். அதைத்தான் இப்போது தெரிவித்திருக்கிறார்.