ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று.

ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகிய பெரிய ஜாம்பவான்களுக்கு பிறகு, அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றார் விராட் கோலி. உலகின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலியால் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. 

விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லியாக இருந்தாலும், அவருக்கு மற்றொரு சொந்த ஊர் பெங்களூரு என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே ஒரு அணிக்காக மட்டுமே ஆடிய வீரர் அவர் தான். 2008ல் ஐபிஎல் தொடங்கியபோது, இளம் வீரரான விராட் கோலியை ஆர்சிபி அணி எடுத்தது. அப்போதிலிருந்து இதுவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடிவருகிறார் விராட் கோலி. அதனால் அவருக்கும் ஆர்சிபி அணிக்கும், ஆர்சிபி ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பு அபரிமிதமானது. 

விராட் கோலி ஒரு முறையாவது ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிடுவார் என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல்லில் அதிக ரன் அடித்த வீரர் விராட் கோலி தான். இதுவரை 177 போட்டிகளில் ஆடி 5412 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. 

ஆர்சிபியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு விராட் கோலியின் கேப்டன்சி குறைபாடும் ஒரு காரணம் என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், அதற்கெல்லாம் செவிமடுக்காமல் விராட் கோலியை ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாகவே பாவிக்கிறது அந்த அணி. 

கொரோனா ஊரடங்கால் இந்த சீசன் தொடங்குவது தாமதமாகியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலியும் டிவில்லியர்ஸும் இன்ஸ்டாகிராமில் லைவ் சேட் செய்தனர்.

அதில், ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து பேசிய விராட் கோலி, ஆர்சிபி அணியில் 12 ஆண்டுகளாக ஆடிவருகிறேன். இது அருமையான பயணமாக அமைந்துள்ளது. 2008லிருந்து ஆர்சிபி அணியில் பயணித்ததை நினைத்து பார்க்கவே அருமையாக இருக்கிறது. சிறப்பான நினைவுகள். ஆர்சிபி அணிக்காக கோப்பையை வெல்வதுதான் நமது லட்சியம். 3 முறை இறுதி போட்டிவரை சென்றும் நூலிழையில் கோப்பையை தவறவிட்டோம். 

ஆர்சிபி அணியை விட்டு விலகி வேறு ஒரு அணிக்காக ஐபிஎல்லில் ஆடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அணி நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் அளப்பரியது. ஒரு சீசன் ஆர்சிபிக்கு சரியாக அமையவில்லை என்றாலும் மிகவும் வருத்தமாக இருக்கும். இது உணர்வுப்பூர்வமான பிணைப்பு. நாம் எப்படி ஆடுகிறோம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நான் எப்போதுமே இந்த அணியை விட்டு விலகமாட்டேன்.  ஆர்சிபியிலிருந்து விலகி வேறு ஒரு அணியில் நான் ஆடுவதற்கு வாய்ப்பேயில்லை என்றார் கோலி.