கொரோனா ஊரடங்கால் மனித குலமே வீட்டில் முடங்கியுள்ளது. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்தாகிவிட்டதால் அல்லது ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

ஆனாலும் வீட்டில் சும்மா இருக்காமல், ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் பதிலளிப்பது, முன்னாள் இந்நாள் வீரர்களுடன் வீடியோ காலில் உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதுடன் ஃபிட்னெஸை பராமரிப்பதிலும் கவனம் செலுத்திவருகின்றனர்.

அந்தவகையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமல் வீடியோ காலில் உரையாடினார்.

அந்த உரையாடலில், ஐபிஎல் தொடர், ஆர்சிபியால் கோப்பையை வெல்ல முடியாததற்கான காரணம், கோலிக்கு யாருடன் இணைந்து பேட்டிங் செய்வது பிடிக்கும் என பல்வேறு கேள்விகளை பீட்டர்சன் கேட்க, அதற்கெல்லாம் கோலி பதிலளித்தார். 

இதையடுத்து அந்த உரையாடல் முடிவதற்கு முன்பாக, மிகவும் பிடித்த கிரிக்கெட் வர்ணனையாளர் யார் என்று பீட்டர்சன் கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி, எனக்கு பிடித்த வர்ணனையாளர்.... என்று இழுத்துக்கொண்டிருக்க, உடனே குறுக்கிட்ட பீட்டர்சன், ஓ நான் தான் உங்களுக்கு பிடித்த வர்ணனையாளரா என்று கிண்டலடித்தார்.

பின்னர், எனக்கு பிடித்த வர்ணனையாளர் என்று இழுத்து கொண்டிருந்த கோலி, அந்த கேப்பில் யாரென யோசித்து, நாசர் ஹுசைன் தான் தனக்கு பிடித்த வர்ணனையாளர் என்றார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், சர்வதேச கிரிக்கெட் உலகில் பிரபலமான முகம் மட்டுமல்லாமல் நற்பெயரையும் கொண்டவர்.

இந்தியாவில் ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர் போன்ற சீனியர் மற்றும் ஜாம்பவான் வர்ணனையாளர்கள் இருந்தபோதிலும், கோலிக்கு மிகவும் பிடித்த வர்ணனையாளர் நாசர் ஹுசைன் தானாம். 

சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான முகம் நாசர் ஹுசைன். நாசர் ஹுசைன் 2017ல் பிசிசிஐ டிவிக்காக விராட் கோலியை இண்டர்வியூ செய்தார். அந்த உரையாடலில் விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக், 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சோபிக்காதது குறித்தெல்லாம் நாசர் ஹுசைனிடம் வெளிப்படையாக கோலி பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலியை இண்டர்வியூ செய்ய கிடைத்த வாய்ப்புக்காக அவருக்கும் பிசிசிஐக்கும் நாசர் ஹுசைன் நன்றி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.