சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2008ல் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணியில் இடம்பிடித்த கோலி, படிப்படியாக வளர்ந்து, தனது திறமையின் மூலம் சதங்களையும் சாதனைகளையும் குவித்ததுடன், இந்திய அணியின் கேப்டனாக வளர்ந்துள்ளார். 

கோலியின் இந்த வளர்ச்சி சாதாரணமாக வந்ததல்ல. கடும் உழைப்பின் மூலம் வந்தது. தனது பேட்டிங் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, இன்றைக்கு 70 சதங்களுடன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கோலி. 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், விராட் கோலியும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் மாணவர்களுடன் சமூக வலைதளத்தில் லைவ் சேட் செய்தனர். அப்போது, தனது வாழ்வில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வி குறித்தும் தான் அடைந்த வேதனை குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்ததும் குறித்தும் விராட் கோலி மனம் திறந்து பேசினார். 

”நான் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். டெல்லி அணியில் ஆட என்னை தேர்வாளர்கள் செய்யாமல் புறக்கணித்தனர். நான் நன்றாக ஆடி ஸ்கோர் செய்திருந்தபோதும், என்னை டெல்லி அணியில் சேர்க்காமல் புறக்கணித்தனர். நான் நன்றாக ஆடி ஸ்கோர் செய்திருப்பதுடன், எந்த தவறுமே செய்யாத நிலையில், நான் புறக்கணிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுதேன். அதிகாலை 3 மணி வரை கதறிக்கதறி அழுதேன்.

எனது பயிற்சியாளரிடம் என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்று சுமார் 2 மணி நேரம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் அழுவதாலும் ஃபீல் பண்ணுவதாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து, எனது லட்சியத்தை நோக்கி முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் எனக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைத்தது. எனவே உங்கள் கனவை நோக்கி முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். வெற்றி உங்கள் வசம்” என்றார் கோலி.