Asianet News TamilAsianet News Tamil

கோலியோட சேதி தெரியாம மோதிய விண்டீஸ் வீரர்.. வில்லியம்ஸுக்கு அவர் பாணியிலயே பதிலடி கொடுத்த விராட்.. ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர் வில்லியம்ஸுக்கு அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தார் விராட் கோலி. 

virat kohli retaliation to williams in first t20
Author
Hyderabad, First Published Dec 7, 2019, 11:26 AM IST

விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்லாது எல்லா வகையிலும் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்யக்கூடியவர். பொதுவாக எதிரணி வீரர்கள் தனக்கு எதிராகவும், அணிக்கு எதிராகவும் செய்யும் சேட்டைகளையும், அவர்களது கொண்டாட்ட பாணியையும், சரியான வாய்ப்பு கிடைக்கும்போது இரு மடங்காக திருப்பி கொடுப்பதில் கைதேர்ந்தவர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அப்படியான ஒரு பதிலடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர் வில்லியம்ஸுக்கு கொடுத்துள்ளார் கோலி. கோலி இந்த பதிலடியை கொடுத்திருந்திருக்க மாட்டார். ஆனால் அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே வில்லியம்ஸ் தான். 

ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 207 ரன்களை குவித்து, 208 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

virat kohli retaliation to williams in first t20

இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் பவுண்டரிக்கு நிகராக சிக்ஸரும் விளாசினார். வெறும் 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து, கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். 

வில்லியம்ஸ் வீசிய 13வது ஓவரில் பந்தை அடித்துவிட்டு கோலி ரன் ஓடும்போது, அவரை மோதும்படியாக ஓடிவந்து அவரது கவனத்தை திசைதிருப்புவதற்காக, அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தார் வில்லியம்ஸ். ஆனால் கோலி, ஒதுங்கி ஓடிவிட்டார். வேண்டுமென்றே ஓடிவரவில்லை, பந்தை பிடிப்பதற்காகத்தான் வந்தேன் என்கிற ரீதியில், இரு கைகளையும் தூக்கி சரணடைந்தார் வில்லியம்ஸ். ஆனாலும் செம கடுப்பான விராட் கோலி, அம்பயரிடம் முறையிட்டார். பின்னர் அதே கடுப்புடன் அந்த விஷயத்திலிருந்து வெளிவந்து அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். 

virat kohli retaliation to williams in first t20

பின்னர் ஹோல்டர் வீசிய 15வது ஓவரில் தனது 23வது டி20 அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி, வில்லியம்ஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் விளாசிய கோலி, வில்லியம்ஸின் ஐகானிக் கொண்டாட்டமான நோட்புக் கொண்டாட்டத்தை, அவருக்கு எதிராக செய்து காட்டினார். வழக்கமாக வில்லியம்ஸ் விக்கெட் வீழ்த்தினால், நோட்புக்கில் எழுதுவதுபோல கொண்டாடுவது வழக்கம். இதே கொண்டாட்டத்தை, கோலிக்கு எதிராகவும் அவர் செய்துள்ளார். ஜமைக்காவில் நடந்த ஒரு போட்டியில் கோலியை வீழ்த்திவிட்டு, தனது ஐகானிக் கொண்டாட்டத்தின் மூலம் மகிழ்ச்சியை கொண்டாடினார் வில்லியம்ஸ். 

அதை நினைவில் வைத்திருந்த விராட் கோலி, வில்லியம்ஸின் பந்தை பறக்கவிட்டு பின்னர், வில்லியம்ஸை போன்றே செய்துகாட்டி, அவரை கடுப்பேற்றினார். ஏற்கனவே தனக்கு எதிராக வில்லியம்ஸ் பயன்படுத்திய கொண்டாட்ட உத்தியை, கோலி மனதில் வைத்திருந்த நிலையில், இந்த போட்டியில் மோதுவதுபோல ஓடிவந்து வில்லியம்ஸ் மேலும் கடுப்பேற்றியதால் ஒட்டுமொத்தமாக தனது கடுப்பை கொட்டித்தீர்த்தார் கோலி. அந்த வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாகிவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios