சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களுடன் 20 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் விராட் கோலி, அவரது கெரியர் முடிவதற்குள் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே விராட் கோலி, ஆர்சிபி அணியில் தான் ஆடிவருகிறார். ஆர்சிபி அணியில் இளம் வீரராக சேர்ந்து, கேப்டனாக வளர்ந்துள்ள கோலிக்கு, அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஒரே குறைதான். ஆனாலும் ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக கோலி திகழ்கிறார். 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடினர். ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி. அதேபோல ஐ.எஸ்.எல்லில் பெங்களூருவின் எஃப்.சி அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. 

கோலி - சேத்ரி இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடலில், கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் நீங்கள்(விராட் கோலி) களத்தில் இருக்கிறீர்கள். அந்த சூழலில் ஷேன் வார்ன் - வக்கார் யூனிஸ் ஆகிய இருவரில் யாருடைய பந்தை எதிர்கொள்ள விரும்புவீர்கள் என்று விராட் கோலியிடம் சுனில் சேத்ரி கேட்டார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, வக்கார் யூனிஸ் பவுலிங்கை தான் எதிர்கொள்ள விரும்புவேன். அதற்கு காரணம் என்னவென்றால், ஷேன் வார்ன் டெத் ஓவர்களை மிகக்கடினமாக வீசுவார். வக்கார் யூனிஸின் யார்க்கர்களைக்கூட நான் ஆடிவிடுவேன். ஆனால் ஷேன் வார்னை எதிர்கொள்வது கடினம். 2009 ஐபிஎல்லில் என்னை முட்டாளாக்கினார் வார்ன். 2011ல் ராஜஸ்தானில் ஆடியபோது, அந்த குறிப்பிட்ட போட்டியில், ஷேன் வார்ன் என்னை அவுட்டாக்கவில்லை. அதேநேரத்தில் நானும் அவரது பந்தில் பெரியளவில் ரன் அடிக்கவில்லை என்றார் கோலி.