சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையையாவது முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

அந்த வகையில், கோலி ஏதாவது ஒரு போட்டியில் ஏதாவது ஒரு சாதனையை முறியடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். அந்தளவிற்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கால் 208 ரன்கள் என்ற கடின இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்களை குவித்தது. 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் பவுண்டரிக்கு நிகராக சிக்ஸரும் விளாசினார். வெறும் 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து, கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். 

இதுதான் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னர் 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 90 ரன்கள் தான் அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டியில் கோலி படைத்த சாதனைகள்:

1. இது விராட் கோலியின் 23வது டி20 அரைசதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். ரோஹித் சர்மா 22 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

2. இந்த போட்டியில் கோலி தான் ஆட்டநாயகன். டி20 கிரிக்கெட்டில் இது கோலியின் 12வது ஆட்டநாயகன் விருது. இதன்மூலம் டி20யில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியுடன் பகிர்ந்துள்ளார். 11 ஆட்டநாயகன் விருதுகளுடன் ஷாஹித் அஃப்ரிடி இரண்டாமிடத்தில் உள்ளார்.