ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் விராட் கோலி, வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் என்னென்ன மைல்கற்களை எட்டியுள்ளார் என்று பார்ப்போம். இந்த போட்டியில் 136 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழந்தார். 

இந்த சதத்தின் மூலம் கோலி செய்த சாதனைகளின் பட்டியல்:

1. பிங்க் பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் இந்தியாவில் பிங்க் பந்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைகளை கோலி படைத்துள்ளார். 

2. இது விராட் கோலியின் 27வது டெஸ்ட் சதம். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27சதங்களை விரைவில் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு(70 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தை சச்சின் டெண்டுல்கருடன்(141 இன்னிங்ஸ்) விராட் கோலி பகிர்ந்துள்ளார். விராட் கோலியும் 141 இன்னிங்ஸ்களில் 27 சதமடித்துள்ளார். 

3. கேப்டனாக அதிக சர்வதேச சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங்கை(41 சதங்கள்) சமன் செய்துள்ளார் கோலி. கோலியும் கேப்டனாக 41 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி முதலிடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் 33 சதங்களுடன் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் உள்ளார்.

4. டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 19 சதங்களுடன் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி 20 சதங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 

5. இந்தியாவில் முக்கியமான ஐந்து டெஸ்ட் மைதானங்களில்(சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி) சதமடித்த வீரர்கள் பட்டியலில் குண்டப்பா விஸ்வநாத், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.