இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள். ஆட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் சில வீரர்களுக்கு இடையேயான மோதலும் நிகழும். 

அப்படி, காலத்தால் அழியாத, கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் தான் 1996 உலக கோப்பையில் நடந்தது. வெங்கடேஷ் பிரசாத் - அமீர் சொஹைலுக்கு இடையேயான அந்த மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

1996 உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 287 ரன்களை குவித்து, 288 ரன்கள் என்ற கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சயீத் அன்வரும் அமீர் சொஹைலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

தொடக்க ஜோடியை ஸ்ரீநாத் பிரித்தார். அன்வரை 48 ரன்களில் ஸ்ரீநாத் வீழ்த்த, தொடக்க ஜோடி உடைந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியிருந்ததால், ஆணவமிகுதியில் இருந்த அமீர் சொஹைல், வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிட்டு, பந்தை போய் பொறுக்கு போ என்கிற ரீதியாக, பிரசாத்தை நோக்கி பேட்டை காட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அமீர் சொஹைலை கிளீன் போல்டாக்கிய வெங்கடேஷ் பிரசாத், போடா போ என்று கையை அசைத்து ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 248 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. 

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இன்ஸ்டாகிராம் லைவில் பகிர்ந்துள்ளனர். 

கோலியும் சேத்ரியும் இன்ஸ்டாகிராமில் பேசினர். அப்போது, அமீர் சொஹைலுக்கு வெங்கடேஷ் பிரசாத் தரமான பதிலடி கொடுத்த சம்பவம், இந்திய கிரிக்கெட்டின் ஐகானிக் முமெண்ட். அப்போது, நீங்கள் எங்கே இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? என்று விராட் கோலியிடம் சுனில் சேத்ரி கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த விராட் கோலி, வீட்டில்தான் இருந்தேன். அந்த மேட்ச்சை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இப்போது, எப்படி களத்தில் கொண்டாடுகிறேனோ, அப்போதும் அப்படித்தான் கொண்டாடினேன். கண்டிப்பாக அது ஐகானிக் முமெண்ட் தான். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த, திருப்தியளிக்கக்கூடிய கிளீன் போல்டு அதுதான் என்று விராட் கோலி தெரிவித்தார். அந்த வீடியோ இதோ..