கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 249 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளது. எனவே 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்,  துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் மக்களின் நலனுக்காக குடும்பங்களை விட்டுவிட்டு, சுயநலம் பாராமல் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

இவர்களின் சேவைக்கு ஈடு இணையே இல்லை. எனவே நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் மருத்துவர்கள், காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். அவர்களை வாழ்த்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் ஆற்றிவரும் அளப்பரிய பணிக்காக அவர்களை மனதார பாராட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் விராட் கோலி. அதில், நாடு முழுவதும் காவல்துறையினர் செய்துவரும் சேவை என்னை நெகிழ வைக்கிறது. கடினமான சூழலில் மக்களுக்கு போலீஸார் செய்யும் உதவிகள் அளப்பரியவை. டெல்லி போலீஸார், அவர்களது நேர்மையாக செய்வதுடன் நின்றுவிடாமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு தினமும் உணவுகளை வழங்கிவருகின்றனர். எனவே காவல்துறையினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சேவையை தொடர்ந்து செய்யுங்கள் சென்று என்று கோலி பாராட்டியுள்ளார்.

கோலியின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துள்ள டெல்லி போலீஸார், உங்களுடைய ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி விராட் கோலி என்று நன்றி தெரிவித்துள்ளது.