உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி கடந்த 2 வருடங்களாக வெற்றிகளை குவித்துவருகின்றன. இந்த இரண்டு அணிகளும் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருப்பதாலும் வலுவான அணிகளை பெற்றிருப்பதாலும் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று அனைத்து ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு சற்று கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பேர்ஸ்டோ, ராய், இயன் மோர்கன், பட்லர் என தாறுமாறாக அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என சிறப்பான ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். 

அண்மைக்காலமாக அபாரமாக பந்துவீசி தன்னை ஒதுக்கமுடியாத அளவிற்கு அபாரமாக ஆடியதால் இளம் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் இங்கிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மேலும் வலுவடைந்துள்ளது. ஆர்ச்சர் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். தொடக்கத்தில் புது பந்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி அவர் அபாரமாக பந்துவீசக்கூடியவர். இவ்வாறு இங்கிலாந்து அணி அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது. 

உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணியில், பட்லர் தான் அந்த அணியின் அபாயகரமான வீரர் என்று பாண்டிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் அந்த அணியின் எக்ஸ் ஃபேக்டர் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

ஆர்ச்சர் குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஜோஃப்ரா ஆர்ச்சர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். அதனால் தான் அவர் உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோப்பையில் அந்த அணியின் வியத்தகு நட்சத்திர வீரர் ஆர்ச்சர் தான் என்று கோலி தெரிவித்துள்ளார்.