சமகாலத்தின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய சாதனைகளை படைத்துவருகிறார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள் என மொத்தம் 70 சதங்களுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(100 சதங்கள்), ரிக்கி பாண்டிங்(71 சதங்கள்) ஆகிய இருவருக்கு அடுத்து 3ம் இடத்தில் உள்ளார்.

சதங்களை சர்வசாதாரணமாக விளாசும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து ஓராண்டு மற்றும் 122 நாட்கள் ஆகிவிட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமானது. விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 44 சதங்களை எட்டிவிடுவார்.

இந்தியாவில் 19 ஒருநாள் சதங்களை அடித்துள்ள விராட் கோலி, இன்னும் ஒரு சதமடித்தால், சொந்த மண்ணில் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின்(20 சதங்கள்) என்ற சாதனையை சமன் செய்துவிடுவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் 41 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். விராட் கோலி இன்னுமொரு சதமடித்தால் பாண்டிங்கை 2ம் இடத்திற்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிடுவார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக 21 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, இன்னுமொரு சதமடித்தால், ரிக்கி பாண்டிங்கின்(கேப்டனாக 22 சதம்) சாதனையை சமன் செய்துள்ளார்.