சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே எட்டப்பட்ட மைல்கற்களையும் படைக்கப்பட்ட பேட்டிங் சாதனைகளையும் தகர்த்தெறிந்து புதிய சாதனைகளை படைத்துவருகிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்டுகளிலும் அசத்தலாக ஆடி சாதனைகளையும் ரன்களையும் குவித்துவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களுடன் 12 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்ட கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 84 போட்டிகளில் ஆடி 27 சதங்களுடன் 7202 ரன்களை குவித்துள்ளார். 

எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு சமகால கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கோலி, 12 ஆண்டுகளுக்கு முன் இந்தளவிற்கு தான் வளர்வேன் என்று தானே நினைத்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், விராட் கோலி, கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ காலில் பேசினார். அப்போது, இந்தளவிற்கு தலைசிறந்த பேட்ஸ்மேனாக வருவீர்கள் என்று உங்கள் கெரியரை தொடங்கும்போது நினைத்திருக்கிறீர்களா என்று கெவின் பீட்டர்சன், கோலியிடம் கேட்டார்.

அதற்கு தனது நேர்மையான பதிலை கிண்டலாக அளித்த கோலி, கண்டிப்பாக இல்லை.. 12 ஆண்டுகளுக்கு முன் யாராவது என்னிடம் வந்து, நீங்கள் பெரிய ஆளாக வந்து, நிறைய சாதனைகளை படைத்து தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வீர்கள் என்று சொல்லியிருந்தால், பேசாம கிளம்புங்க என்று தான் சொல்லியிருப்பேன் என்று கலகலப்பாக பதிலளித்தார்.