சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துவருகிறார் விராட் கோலி. போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை உடைத்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 72 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஆனாலும் அவரது 72 ரன்கள் அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதையும் அவர் தான் வென்றார். 

இந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில்(ஒருநாள், டெஸ்ட், டி20 சேர்த்து) 20 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 417வது இன்னிங்ஸில் 20 ஆயிரம் சர்வதேச ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 20 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவருமே தங்களது 453வது இன்னிங்ஸில் 20 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 464 இன்னிங்ஸ்களில் 20 ஆயிரம் ரன்கள் குவித்த பாண்டிங் மூன்றாமிடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ் நான்காமிடத்திலும் ஜாக் காலிஸ் ஐந்தாமிடத்திலும் ராகுல் டிராவிட் ஆறாமிடத்திலும் உள்ளனர். 

மேலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4வது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் உலக கோப்பையில் தொடர்ச்சியாக அதிகமுறை 50 ரன்களுக்கு அதிகமாக அடித்த வீரர்கள் பட்டியலில் நவ்ஜோத் சிங் சித்து, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி உள்ளார். சித்து, சச்சின் இருவருமே நான்குமுறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால் அவர்களின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார்.