கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியே, இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்த போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளதால் ஆடும் லெவனில் ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ரோஹித் சர்மா இறக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 வீரர்களுக்கான இடத்தை மட்டும் கேப்டன் கோலி உறுதி செய்திருக்கிறார். தொடக்க வீரர்கள் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இரண்டு போட்டிகளிலும் ஆடுவார்கள் என்பதை கேப்டன் கோலி உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இதுகுறித்து பேசிய கோலி, தொடக்க ஜோடியை பொறுத்தமட்டில் எங்களிடம் 2 வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனவே 2 போட்டிகளிலுமே அவர்கள் இருவரையும் ஆடவைப்பதுதான் எங்கள் திட்டம். அவர்கள் களத்திற்கு சென்று அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடட்டும். மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடியுள்ளார். ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் தீவிரத்தில் உள்ளார் என்று கோலி தெரிவித்தார்.