உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன.

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தானுக்கு அபாரமாக ஆடி 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, மற்றுமொரு இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் கூட 140 ரன்களில் அவுட்டானார். அதனால் கடும் அதிருப்தியடைந்தார். எனவே பாகிஸ்தானிடம் விட்டதை ஆஃப்கானிஸ்தானிடம் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரன் மட்டுமே அடித்து முஜீபுர் ரஹ்மானின் சுழலில் கிளீன் போல்டாகி வெளியேறினார் ரோஹித். 

இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். நிதானமாக ஆடி களத்தில் நன்றாக செட்டான ராகுல், முகமது நபியின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். 

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிவந்தார். ஆனால் அதை தொடரவில்லை. விஜய் சங்கர் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக ஆடினார்.  ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கை அடித்து ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். 

ஒருமுனையில் விராட் கோலி என்ற ஜாம்பவான் என்ற ஆடிக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே எதிர்முனையில் ஆடும் பேட்ஸ்மேனுக்கு உத்வேகம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நெருக்கடியே இருக்காது. விராட் கோலி அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பதால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினாலே போதும்.

நான்காம் வரிசைக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்வாகி, ஆடும் லெவனிலும் இடம்பிடித்த விஜய் சங்கர், அணியில் தன்னை சேர்த்ததற்கு நியாயம் கற்பிக்க கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார். 29 ரன்களில் ரஹ்மத் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதையடுத்து விராட் கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

விஜய் சங்கர், தன்னால் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி இன்னிங்ஸை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்ல முடியும் என்பதை நிரூபிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை நழுவவிட்டார்.