உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் திருப்தியடைந்தது.

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

இந்நிலையில், முன்னாள் ஜாம்பவான்கள் பலர் பல வீரர்களை நான்காம் வரிசைக்கு பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பரிந்துரைத்த வீரர்களை விட விஜய் சங்கர் அந்த இடத்திற்கு பொருத்தமான மற்றும் தகுதியான வீரர்.

ராயுடு சரியாக ஆடாத அதேவேளையில், தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் அசத்தலாக ஆடினார். சூழலுக்கு ஏற்றவகையில் ஆடினார். மிடில் ஓவர்களில் பொறுமையாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடும் விஜய் சங்கர், அதேநேரத்தில் பெரிய ஷாட்டுகளையும் நன்றாக ஆடுகிறார். ஃபீல்டிங் நன்றாக செய்கிறார். பவுலிங்கும் வீசுவார் என்பதால், தேவைப்பட்டால் அவரை மிடில் ஓவர்களில் சில ஓவர்களை வீசவைக்கலாம். 

அந்த வகையில் விஜய் சங்கரை நான்காம் வரிசையில் களமிறக்கலாம் என்று நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் ஏற்கனவே கருத்து தெரிவித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். முன்னாள் வீரர் அஜித் அகார்கரும் கூட அதே கருத்தை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், விஜய் சங்கரும் கூட அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டிப்பாக விஜய் சங்கரை 4ம் வரிசையில் இறக்க அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். எனினும் கடைசி வாய்ப்பாக ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கூட,  4ம் வரிசையில் இறங்க வாய்ப்பிருக்கிறது. எனினும் விஜய் சங்கரின் பெயர் 4ம் வரிசைக்கு தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. 

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அணி நிர்வாகி ஒருவர், விஜய் சங்கரின் வளர்ச்சி அபாரமானது. அவர் சிங்கிள் ரொடேட் செய்வதோடு அடித்தும் ஆடுகிறார். நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடினார். தரமான ஸ்விங் பவுலிங்கை சிறப்பாக ஆடினார். அதன்மூலம் ஸ்விங் பவுலிங்கை தன்னால் சிறப்பாக ஆடமுடியும் என நிரூபித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் வெறும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். எனினும் ஐபிஎல் வரை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் ராயுடுவே வாய்ப்பை தக்கவைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அவர் மீடியம் ஃபாஸ்ட் பவுலிங்கில் திணறுகிறார். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடுகிறார் என்று தெரிவித்துள்ளார். 

எனவே உலக கோப்பை அணியில் தனது பெயரை எளிதாக தவிர்க்கமுடியாதபடி வலுவான ஓர் இடத்தை பிடித்துள்ளார் விஜய் சங்கர்.