இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள். ஆட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் சில வீரர்களுக்கு இடையேயான மோதலும் நிகழும். 

அப்படி, காலத்தால் அழியாத, கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் தான் 1996 உலக கோப்பையில் நடந்தது. வெங்கடேஷ் பிரசாத் - அமீர் சொஹைலுக்கு இடையேயான அந்த மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

1996 உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 287 ரன்களை குவித்து, 288 ரன்கள் என்ற கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சயீத் அன்வரும் அமீர் சொஹைலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

தொடக்க ஜோடியை ஸ்ரீநாத் பிரித்தார். அன்வரை 48 ரன்களில் ஸ்ரீநாத் வீழ்த்த, தொடக்க ஜோடி உடைந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியிருந்ததால், ஆணவமிகுதியில் இருந்த அமீர் சொஹைல், வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிட்டு, பந்தை போய் பொறுக்கு போ என்கிற ரீதியாக, பிரசாத்தை நோக்கி பேட்டை காட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அமீர் சொஹைலை கிளீன் போல்டாக்கிய வெங்கடேஷ் பிரசாத், போடா போ என்று கையை அசைத்து செய்கை காட்டி பதிலடி கொடுத்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 248 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. 

அந்த போட்டியில் அமீர் சொஹைலுடனான மோதல் குறித்து, அப்போதைய மனநிலை குறித்தும் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் “டி.ஆர்.எஸ் வித் ஆஷ்”-ல் மனம் திறந்து பேசியுள்ளார் வெங்கடேஷ் பிரசாத். 

அந்த சம்பவம் குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், அமீர் சொஹைல் அடித்த பவுண்டரி, செம அறை. இறங்கிவந்து, பாயிண்ட்டுக்கும் எக்ஸ்ட்ரா கவர் திசைக்கும் இடையே பவுண்டரி அடித்தார். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 35,000 ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள்; மிகவும் அழுத்தமான போட்டி அது.  

பாகிஸ்தான் வீரர்கள் ஆரம்பத்தில் ஆடியதை பார்க்கையில், 45 ஓவர்களில் போட்டி முடிந்துவிடும் என்றுதான் தோன்றியது. அந்த ஓவரை வீசுவதற்கு முன், நான் ஃபைன் லெக்கில் ஃபீல்டிங் செய்யும்போது, ரசிகர்களை கவனித்தேன். அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் சீட் நுனியில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களால் நடப்பதை நம்பவே முடியவில்லை. கடும் நெருக்கடியாக இருந்தது.

அப்படியான சூழலில், இறங்கி வந்து ஒரு பவுண்டரி அடித்தது மட்டுமல்லாமல், அடுத்த பந்தையும் அங்கு அடிப்பேன் என்று அவர் சொன்னது எனது காதில் விழுந்தது. நானும் பதிலுக்கு 2 வார்த்தை பேசிவிட்டு நகர்ந்துவிட்டேன். என் மீது எப்போதுமே பேட்ஸ்மேன்களை ஆதிக்கம் செலுத்த விடமாட்டேன். எனது கேரக்டர் அப்படி. அப்படி யாராவது ஆதிக்கம் செலுத்தினால், பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால், அதேவேளையில், கூலான மனநிலையிலிருந்து தவறி பதற்றம் அடைந்துவிடவும் கூடாது. சிந்தித்து சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.  என் மனதுக்குள் பல விஷயங்கள் ஓடின. பதற்றமடையாமல், பேட்ஸ்மேனுக்கு ஓங்கி அடிப்பதற்கு தேவையான இடைவெளியை கொடுக்காமல், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசினேன்; கிளீன் போல்டு என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.