அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 

அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் முன்னேறின.

இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து ஃபைனலுக்கு முன்னேறியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் யஷ் துல் மற்றும் ஷைக் ரஷீத் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினார்கள். ரஷீத் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அபாரமாக பேட்டிங் ஆடிய யஷ் துல் சதமடித்தார். 110 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழக்க, தினேஷ் பானா 4 பந்துகளை எதிர்கொண்டு அதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்து முடிக்க, 50 ஓவரில் இந்தியா அண்டர் 19 அணி 290 ரன்களை குவித்தது.

291 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து 42வது ஓவரில் 194 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அண்டர் 19 அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

வரும் 5ம் தேதி நடக்கும் ஃபைனலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.