ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்னஸ் லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோர் இல்லாத நிலையில், டாம் லேதம், ரோஸ் டெய்லர், டி கிராண்ட் ஹோம், வாட்லிங் ஆகியோர் சிறப்பாக ஆடினால்தான் அணியை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் லேதமும் டாம் பிளண்டெலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கி தெளிவாக ஆடிவருகின்றனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் 29 ஓவர்களை எதிர்கொண்ட லேதமும் பிளண்டெலும் விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிடாமல் கவனமாகவும் சிறப்பாகவும் ஆடி ஸ்கோர் செய்தனர். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், பாட்டின்சன் ஆகியோரிடம் சிக்கிவிடாமல் அபாரமாக ஆடினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் 63 ரன்களை அடித்தது. டாம் லேதம் 26 ரன்களுடனும் டாம் பிளண்டெல் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

நியூசிலாந்து அணி ஆடும்போது, 28வது ஓவரை லபுஷேன் வீசினார். அந்த ஓவரை டாம் லேதம் எதிர்கொண்டார். அப்போது, மேத்யூ வேட் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்தார். அந்த ஓவரில் ஒரு பந்தை லபுஷேன் ஷார்ட் பிட்ச்சாக வீச, அதை ஓங்கி லெக் திசையில் அடித்தார் டாம் லேதம். லேதம் ஓங்கி அடித்த பந்து, ஷார்ட் லெக் திசையில் நின்ற மேத்யூ வேடின் கையில் பட்டு, ஹெல்மெட்டில் அடித்தது. அப்படியே சரிந்து விழுந்தார் வேட்.

பேட்ஸ்மேன் லேதமும் விக்கெட் கீப்பர் டிம் பெய்னும் உடனடியாக ஓடிச்சென்று, வேடை தூக்கினர். நல்லவேளையாக மேத்யூ வேடிற்கு எந்தவிதமான அடியும் படவில்லை. அதனால் பயப்படும்படியாக எதுவுமில்லை. ஆனால், செம அடி அது.. அந்த வீடியோ இதோ..