உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மான்செஸ்டரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11ம் தேதி பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பும்ரா, ஷமி/புவனேஷ்வர் குமார், சாஹல்/ஜடேஜா, குல்தீப், ஹர்திக் பாண்டியா என 5 பவுலர்களுடன் தான் இதுவரை இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இந்திய அணி 6 பவுலர்களுடன் ஆடுமா அல்லது 5 பவுலர்களுடன் தான் ஆடுமா என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தினேஷ் கார்த்திக் 7வது வரிசையில் தான் இறங்கப்போகிறார் என்றால், அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்ப்பதுதான் சரியான தேர்வாக இருக்கும் என்று சச்சின் கருத்து தெரிவித்திருந்தார். கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் கிடைக்கும் என்பதற்காகத்தான் சச்சின் இந்த கருத்தை தெரிவித்தார். 

இந்திய அணி இன்றைய போட்டியில் 5 பவுலர்களுடன் களமிறங்குவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் ஜடேஜா, தினேஷ் கார்த்திக் இருவருமே அணியில் இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சாஹல் - குல்தீப் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு ஜடேஜா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சாஹல் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டார். ஆனால் குல்தீப் யாதவ் சரியாக சோபிக்கவில்லை. மிடில் ஓவர்களில் குல்தீப் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவில்லை. இன்றைய போட்டியில் ஜடேஜா - சாஹல் ஸ்பின் ஜோடியுடன் ஆட வாய்ப்புள்ளது. குல்தீப்பை விட சாஹல் நல்ல ஃபீல்டரும் கூட. அந்தவகையில் குல்தீப் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்படுவார். கடந்த போட்டியில் ஆடிய ஜடேஜா கண்டிப்பாக அணியில் இருப்பார். 

அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. புவனேஷ்வர் குமார் நன்றாக வீசினாலும் கடந்த போட்டியில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் அதற்காக மட்டுமே புவனேஷ் நீக்கப்படுவார் என்று கூறமுடியாது. உலக கோப்பைக்கு முன்பாக நடந்த நியூசிலாந்து தொடரில் ஷமி அபாரமாக வீசியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் ஷமி ஆடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

உத்தேச இந்திய அணி;

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், ஷமி, பும்ரா.