இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில், நான்காவது போட்டியில் ஆடிய அணியிலிருந்து பெரிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை.

கடந்த போட்டியில் ராயுடுவுக்கு பதில் ஆடிய ராகுல் இந்த போட்டியிலும் தொடர்வார். கடந்த போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். எனினும் அவர் இந்த போட்டியில் நீக்கப்பட வாய்ப்பில்லை. ஒரு போட்டியில் சொதப்பியதன் அடிப்படையிலோ அல்லது தோனியுடனான ஒப்பீட்டின் அடிப்படையிலோ ரிஷப் பண்ட்டை நீக்கமாட்டார்கள். அவர் இளம் வீரர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் எடுத்த எடுப்பிலேயே தோனியின் அளவுக்கான தேர்ந்த விக்கெட் கீப்பிங்கை ரிஷப் பண்ட்டிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற எதார்த்தத்தின் அடிப்படையில் ரிஷப் பண்ட் நீக்கப்பட வாய்ப்பில்லை. 

ஆனால் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. சாஹலுக்கு பதிலாக ஷமி களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. சாஹலின் பவுலிங்கை கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 10 ஓவர்களை வீசி 80 ரன்களை வாரி வழங்கினார் சாஹல். எனவே இந்த போட்டியில் சாஹல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷமி களமிறக்கப்படலாம். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாருடன் மட்டும் களமிறங்கலாம். ஆனால் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பவுலிங்கில் வேகம் இல்லை என்பதால் அவரை அதிகமாக பயன்படுத்துவதில்லை. அந்த வகையில் ஷமி இருந்தால் அணிக்கு பலம் சேர்க்கும் என்பதால் ஷமி களமிறக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, அதில் ஒருவரது பவுலிங் எடுபடவில்லை என்றால் கூட மற்ற இருவரை வைத்து நெருக்கடி கொடுக்க முடியும்.

குல்தீப்பும் கேதரும் ஸ்பின் பவுலிங்கை பார்த்துக்கொள்வர். ஆறாவது பவுலராக விஜய் சங்கர் இருப்பார். சாஹல் நீக்கப்படுவது உறுதி, அவரது இடத்தில் ஷமியை இறக்குவதே நல்லது. ஜடேஜாவை இறக்க தேவையில்லை. 

உத்தேச இந்திய அணி.

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப், ஷமி, பும்ரா.